திருவள்ளூரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது.

Update: 2018-07-17 23:43 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் சுந்தரவல்லி கூறியதாவது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 10-1-2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கையினை கொண்டு கிராமப்புறங்களில் 1,200 வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கும் பணி கடந்த 21-6-2018 முதல் தொடங்கி மேற்படி தொகுதிகளில் பிரிக்கப்படும் வாக்குச்சாவடிகளின் விவரம் அடங்கிய பட்டியல் கடந்த 2-7-2018 அன்று வெளியிடப்பட்டது.

மேற்படி தொகுதிகளில் அடங்கிய வாக்குச்சாவடி இணைத்தல், வாக்குச்சாவடி சேர்த்தல், வாக்குச்சாவடி இடமாற்றம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் குறித்த ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் 2-7-2018 முதல் 9-7-2018-க்குள் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்களின் ஆட்சேபனைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்