பாளையங்கோட்டையில் பரபரப்பு: தனியார் பள்ளிக்கூடத்தில் திடீர் தீ விபத்து அலறியடித்து வெளியேறியதால் மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்

பாளையங்கோட்டையில் தனியார் பள்ளிக்கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அலறியடித்து வெளியேறியதால் மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.

Update: 2018-07-18 22:00 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் தனியார் பள்ளிக்கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அலறியடித்து வெளியேறியதால் மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.

தனியார் பள்ளிக்கூடம்

நெல்லை பாளையங்கோட்டை எல்.ஐ.சி. ரோட்டில் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. 2 மாடி கொண்ட அந்த பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ளது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இங்கு படித்து வருகிறார்கள். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடம் தொடங்கியது.

மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தன. பள்ளிக்கூடத்தின் 2-வது மாடியில் உள்ள ஒரு அறையில் பழைய ஆவணங்கள், பழைய புத்தகங்கள் உள்ளிட்டவைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

திடீர் தீ

மதியம் 12.15 மணி அளவில் 2-வது மாடியில் உள்ள ஒரு வகுப்பறையில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென ஆவணங்கள் இருந்த அறைக்கும் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. இதில் வகுப்பறையில் உள்ள பெஞ்ச், புத்தகங்கள் தீயில் கருகின. ஸ்மார்ட் வகுப்பறை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் பழைய ஆவணங்கள், புத்தகங்கள் எரிந்தன.

இதை பார்த்த மாணவ-மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். 2-வது மாடியில் இருந்து மாணவர்கள் படிக்கட்டு வழியாக ஓடி வந்தனர். தங்களது புத்தக பைகளை வகுப்பறையிலேயே போட்டு விட்டு வந்தனர். ஓடி வரும் போது சில மாணவர்கள் கீழே விழுந்தனர். பின்னர் அவர்கள் எழுந்து ஓடி வெளியே வந்தனர். அனைத்து மாணவ-மாணவிகளும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.

பரபரப்பு

மாணவர்கள் ஓடி வரும்போது சில மாணவர்கள் தங்களது காலணியை அங்கேயே விட்டு விட்டு வெளியே வந்தனர். சில மாணவர்கள் பள்ளிக்கூட காம்பவுண்டு சுவரை தாண்டி வெளியே வந்தனர்.

வெளியே வந்த அனைத்து மாணவர்களும் எதிரே அதே நிர்வாகத்தில் கீழ் உள்ள மற்றொரு பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வந்தன. அந்த வீரர்களும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

30 நிமிட போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு இருந்து கரும்புகை வெளியேறியது. சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

பெற்றோர்கள் குவிந்தனர்

தீ விபத்து நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கூடம் முன்பு குவிந்தனர். அந்த கூட்டத்தில் தங்களது குழந்தைகளை சிரமப்பட்டு கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். வழக்கமாக பல மாணவர்கள் ஆட்டோவில் பள்ளிக்கூடத்துக்கு வருவது வழக்கம்.

அந்த ஆட்டோ டிரைவர்கள் வந்து மாணவர்களை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மாணவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் சில டாக்டர்கள், மருத்துவ குழுவினர் இருந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த மாணவர்களுக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங் ஆகியோர் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்கள் தீ விபத்து நடந்த வகுப்பறைகளை பார்வையிட்டனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில் பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்