அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது

அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது.

Update: 2018-07-18 22:45 GMT
க.பரமத்தி,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. கடந்த வாரம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து கடந்த 16–ந் தேதி அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது. அணையின் நலன் கருதி அன்று மதியம் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டது.

 இந்த தண்ணீர் நேற்று காலை 7 மணிக்கு கரூர் மாவட்ட எல்லையான வடகரைக்கு வந்தது. இதனால் கோடந்தூர், கூடலூர் மேற்கு, கூடலூர் கிழக்கு, சின்னதாராபுரம், தொக்குப்பட்டிபுதூர், ராஜபுரம், புஞ்சைகாளிகுறிச்சி, நஞ்சைகாளிகுறிச்சி, அணைப்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், பவித்திரம், விசுவநாதபுரி ஊராட்சிகள் மற்றும் கரூர் பகுதி விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமராவதி அணையில் இருந்து ஒரு போக சாகுபடிக்கு முறைப்படுத்தி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மேலும் ஆடி 18–ம் பெருக்கிற்கு கடந்த 4 வருடமாக தண்ணீர் வராததால் புதுமணத்தம்பதிகளும், பொதுமக்களும் தாலி பிரித்து கட்டுவதை வேறு இடத்திற்கு சென்று தான் செய்தனர். இந்த வருடமாவது சிறப்பாக கொண்டாட ஆடி 18 அன்று அமராவதி ஆற்றில் தண்ணீர் ஓட வேண்டும் என எதிர்பார்த்த வேளையில் தண்ணீர் வருவது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அணையின் நேற்று காலை 7 மணி நிலவர நீர்மட்டம் 86.39 அடி. அணைக்கு வினாடிக்கு 4,145 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 3,672 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையில் 3,722.82 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

மேலும் செய்திகள்