அசுர வேகத்தில் சென்ற தனியார் பஸ் கவிழ்ந்து 36 பேர் படுகாயம்

திருப்பத்தூர் அருகே அசுர வேகத்தில் சென்ற தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-07-18 23:30 GMT
சிங்கம்புணரி,

மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு தேவகோட்டையை நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 60 பயணிகள் பயணம் செய்தனர். தனியார் பஸ்சை மதுரையை சேர்ந்த சிவமயம் (வயது45) என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த தனியார் பஸ் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் விலக்கு அருகே அதிவேகமாக வந்துக்கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலை கீழாக கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பலர் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர்.

இதையடுத்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து தகவல்அறிந்த எஸ்.எஸ். கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த வழியாக சென்ற பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் 2 வாகனத்தில் விபத்தில் சிக்கியவர்களை ஏற்றி திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 36 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 10பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, திருப்பத்தூர் வழியாக செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகத்தை கடைப்பிடிக்கின்றனர். அந்த பஸ்சின் டிரைவர் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மதுரையை சென்றடைய வேண்டும்.

அதன் மூலம் தான் அதிக வருமானத்தை பெறலாம் என்ற நோக்கத்துடன் பயணிகளின் உயிரோடு விளையாடி வருகின்றனர். கடந்த 2 வாரத்திற்கு முன்பு காரைக்குடி அருகே பாதரக்குடி பகுதியில் இரவு நேரத்தில் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடிக்கு அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை வளைவில் கவிழ்ந்தது.

அதிவேகத்தில் செல்லும் இந்த தனியார் பஸ்களை சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிறுத்தி ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்