தொடரும் கடல் சீற்றத்தால் பாதிப்பு: குளச்சல் துறைமுக பாலத்தின் தூண் சரிந்தது

குளச்சலில் தொடரும் கடல் சீற்றத்தால் துறைமுக பாலத்தின் தூண் சரிந்து விழுந்தது.

Update: 2018-07-18 23:00 GMT
குளச்சல்,

குளச்சல் கடல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், சுமார் 1,000 வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். தற்போது இங்கு ஆழ்கடலில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்த தடை வருகிற 31-ந் தேதி நீங்குகிறது.

இதனால் கட்டுமரம், வள்ளத்தில் மட்டுமே மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே குளச்சல் சுற்று வட்டார பகுதியில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலில் பலத்த காற்றுடன் ராட்சத அலைகள் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுவதால், பெரும்பான்மையான வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இந்தநிலையில் தொடர் கடல் சீற்றம் காரணமாக குளச்சல் துறைமுக பாலத்தின் தூண் ஒன்று நேற்று சரிந்து கடலில் விழுந்தது. கடந்த 15 வருடத்திற்கு முன்பு பெய்த கனமழையின் போது ஏற்கனவே 5 தூண்கள் சரிந்து கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமும் மாலை குளச்சல் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் இந்த துறைமுக பாலத்தின் மீது நின்று கடற்கரையை ரசித்து செல்வது வழக்கம். தற்போது துறைமுக பாலத்தின் தூண்கள் சரிந்து வருவதால் பாலத்தின் மீது செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பாலத்தின் அடிப்பாகத்தில் காங்கிரீட்கள் அனைத்தும் உடைந்து அபாய நிலையில் காணப்படுகிறது. எனவே மாலையில் கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் துறைமுகத்தின் பாலம் மீது செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்