ஒரே நாளில் மீனவர்கள் வலையில் 100 டன் கிளிச்சை மீன்கள் சிக்கின

கடலூர் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மீனவர்கள் வலையில் 100 டன் கிளிச்சை மீன்கள் சிக்கின.

Update: 2018-07-18 22:30 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, அக்கரைக்கோரி உள்பட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க செல்லும் இந்த மீனவர்களுக்கு வலையில் அதிக அளவு மீன்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக கிளிச்சை மீன்கள் அதிக அளவில் சிக்கி வருகிறது.

இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், கடந்த 3 நாட்களாக மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. இன்று (அதாவது நேற்று) ஒரே நாளில் கடலூர் துறைமுகத்துக்கு கிளிச்சை மீன்கள் 100 டன் வரத்து இருந்தது. அதில் மீனவர்கள் கொண்டு வந்த ஒரு படகில் மட்டும் 2 டன் கிளிச்சை மீன்கள் இருந்தது.

இந்த வகை மீன்கள் பெரும்பாலும் கேரளாவில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த மீன்களை கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். 1 டன் ரூ.1 லட்சத்துக்கு ஏலம் போனது என்றார்.

இது தவிர கவளை, மத்தி, கொடுவா போன்ற மற்ற வகை மீன்களின் வரத்தும் அதிகளவில் இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் நேற்று கடலூர் துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 

மேலும் செய்திகள்