என்ஜினீயரிங் மாணவியை பலாத்காரம்; வாலிபர் கைது

என்ஜினீயரிங் மாணவியை பலாத்காரம் செய்த தனியார் நிறுவன பொறியாளர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2018-07-18 22:22 GMT
விழுப்புரம், 


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா நீலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் பாலாஜி என்கிற தமிழ்செல்வன் (வயது 24). இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.டெக் படித்தபோது அவருக்கும் அதே கல்லூரியில் எம்.டெக் படித்து வந்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற பாலாஜி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து மாணவியை பலாத்காரம் செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாலாஜியை வளவனூர் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது தகராறு வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவருடைய இத்தகைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் பாலாஜியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து பாலாஜியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வளவனூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்