கரூர் அரசுக்கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்

கரூர் அரசுக்கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம் நடத்தினர்.

Update: 2018-07-19 23:00 GMT
கரூர்,

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கரூர் கிளை சார்பில் கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம் நடத்தினர். இதற்கு செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மண்டல இணை செயலாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது பல்கலைக்கழக மானியக்குழுவின் 7–வது ஊதிய திருத்தத்தை அனைத்து மாநிலங்களும் சீராக ஒரே காலத்தில் அமல்படுத்த ஏதுவாக மத்திய அரசு 100 சதவீத நிதியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி நினைவூட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அனைத்து மாநிலங்களும் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.


தற்காலிக ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், வட்டார வளர்ச்சி நிதி ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம், பணிநிலை ஆணை வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6–வது ஊதியக்குழுவிலுள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தர வாரியான தன்னாட்சி அதிகாரம் நீக்கப்படுவதோடு, தற்போது யூ.ஜி.சி. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டுள்ள உயர்கல்வி நிதி வழங்கல் நிறுவனம் (எச்.இ.எப்.ஏ.) மற்றும் உயர் கல்வி அதிகார ஒழுங்குமுறை நிறுவனம் (எச்.இ.இ.ஆர்.ஏ.) உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் தலைவர் சண்முகம், துணை தலைவர் இளங்கோவன், இணை செயலாளர் ஜூடஸ்மேரி, பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்