ஆத்தங்குடி ஊராட்சியில் 453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் லதா வழங்கினார்

காரைக்குடி அருகே ஆத்தங்குடி ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 453பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் லதா வழங்கினார்.

Update: 2018-07-19 23:15 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே ஆத்தங்குடி ஊராட்சியில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் மனு நீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லதா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் அரசின் திட்டங்கள் முழுமையாக கிராம பகுதிகளுக்கு சென்றடையவேண்டும் என்பதே ஆகும்.

அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு திங்கட் கிழமை அன்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதற்குரிய நடவடிக்கையின் மூலம் தீர்வு காணப்படுகின்றன. அதை தொடர்ந்து மாதம் ஒரு முறை மக்கள்தொடர்பு முகாம் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் மாதம் ஒரு முறை ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் ஆத்தங்குடி ஊராட்சியை தேர்வு செய்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 580 மனுக்களில் சுமார் 453 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிகளில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு அவை சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் இயங்கி வருகின்றன. இதை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் அரசால் அறிவிக்கப்படுகிற அனைத்து திட்டங்களும் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும்கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.


கூட்டுறவுத் துறை சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3லட்சத்து 12ஆயிரத்து 500 மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஸ்மார்ட் சிவகங்கா என்ற செயலி தொடங்கப்பட்டு அதன் மூலம் அனைத்து துறைகளிலும் உள்ள பயன்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தவிர வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து இந்த செயலியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ந்து குடிமராமத்து பணிக்கு ரூ.24கோடி ஒதுக்கீடு செய்து 104 கண்மாய்கள் சீரமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுஉள்ளது. இந்த குடிமராமத்து பணிகளை மக்களே தேர்வு செய்து எடுத்து செய்யப்படும் பணியாகும். இந்த திட்டத்தை கண்காணிக்க உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பாசன கண்மாய்கள் சீரமைத்தல், வரத்துக் கால்வாய் கரைகளை பலப்படுத்துதல், கண்மாய்களில் மடைகள் சீரமைத்தல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுஉள்ளது. இதுமட்டுமல்லமால் இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியகருப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, தேவகோட்டை சப்-கலெக்டர் ஆஷாஅஜித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஆரோக்கியசுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் பழனீஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்