பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் கலெக்டர் நடராஜன் வேண்டுகோள்

பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

Update: 2018-07-19 23:30 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் யூனியன் சித்தார்கோட்டை ஊராட்சியில் உள்ள முருகன்கோவில் வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் சேவுகபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத வீடுகளுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல், மின் சிக்கனத்தை ஏற்படுத்திடும் வகையில் உஜாலா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் ரூ.250 மதிப்புள்ள எல்.இ.டி. மின்விளக்குகளை தேவைக்கு ஏற்ப அதிகபட்சம் 10 விளக்குகளை வழங்குதல், மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்குதல் போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இதுதவிர விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த ஏதுவாகவும், நீர்நிலைகளை ஆழப்படுத்த வண்டல் களிமண் படிமங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான படிவங்களை சமர்பித்து பயனடையலாம். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். குடிநீரை முறைகேடாக பயன்படுத்துபவர்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அவரிடம் முஸ்லிம் ஜமாத் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தார்கோட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் வருசைமுகம்மது, ஜமாத் தலைவர் சாகுல்அமீதுகனி, முகமதியா பள்ளிகளின் தலைவர் சுல்தான்சாகுல் அமீது, ஜமாத் செயலாளர் சாகுல்அமீது, முன்னாள் தலைவர் அகமது கபீர், சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் மன்றத்தினர், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.


அதில், சித்தார்கோட்டையில் உள்ள முகமதியா பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், சித்தார்கோட்டை ஊராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனை சமாளிக்க தடையில்லா குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் பள்ளி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த சாலையை உயர்த்தி புதிதாக அமைக்க வேண்டும். சித்தார்கோட்டை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மையம் ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கூட்டத்தில் தாசில்தார் சிவக்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்