பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சங்க நிர்வாகிகளுடன் சென்று கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு கொடுத்தார்.

Update: 2018-07-19 21:45 GMT
விழுப்புரம்,

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருக்கோவிலூரில் நடைபாதை வியாபாரிகள் பல ஆண்டுகளாக பெருமாள் கோவில் தெரு சாலைகளில் கடைகள் வைத்து காய்கறி, பூ உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வந்தார்கள். இக்கடைகளால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை அகற்றினர். இதனால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் பூட்டிக்கிடக்கும் காந்தி மண்டபம் அருகே மாற்று இடம் வழங்க வேண்டும் என அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் நகரின் வெளிபகுதியில் மாற்று இடம் ஒதுக்கி தருவதாக கூறி வருகின்றனர். அங்கு கடைகள் நடத்தினால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் வந்து செல்லும் நகரப்பகுதியிலேயே கடைகள் நடத்த மாற்று இடம் ஒதுக்க வேண்டும்.

காய்கறி கடைகளுக்கு என தனியாக கடைகள் கட்டவேண்டும். அதுவரை காந்திமண்டபம் அல்லது ஏற்கனவே உள்ள பெருமாள் கோவில் சாலையோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். மத்திய அரசும் நடைபாதை வியாபாரிகள் நலன் காக்க சட்டங்கள் இயற்றியுள்ளது. இதனை புரிந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

மேலும் செய்திகள்