தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்டி

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெறும் விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-19 22:15 GMT
ராமநாதபுரம்,

தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை, கலைபண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 21 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்பால் ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், பயிற்சியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என மூன்று வகையாக ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000-மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000-மும் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள்.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000 மற்றும் 4 கிராம் தங்க பதக்கமும், இரண்டாம் பரிசு ரூ.25,000 மற்றும் 4 கிராம் தங்க பதக்கமும், மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் 4 கிராம் தங்க பதக்கமும் சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடு 50-வது ஆண்டு பொன்விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்