அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ பறிமுதல்

கடலூரில் அளவுக்கு அதிகமாக மாணவர் களை வந்த ஷேர் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை ஓட்டி வந்த டிரைவரின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Update: 2018-07-19 21:45 GMT
கடலூர், 

ஆட்டோ ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பல ஆட்டோ டிரைவர்கள் அதனை கடைபிடிப்பதில்லை, குறிப்பாக டிரைவருடைய இருக்கை அருகில் பயணிகளை அமர வைக்கக்கூடாது என்பதையும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது என்பதையும் கடைபிடிப்பதில்லை. அதோடு செல்போனில் பேசிக்கொண்டே ஆட்டோவை ஓட்டிச்செல்வதாகவும் கடலூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் உத்தரவுப்படி கடந்த 2 நாட்களாக போக்குவரத்து போலீசாரும், புதுநகர் போலீசாரும் வாகன சோதனை செய்து வருகின்றனர்.

இதில் டிரைவர் இருக்கை அருகில் பயணிகளை அமர வைத்திருந்த 10 ஆட்டோக்களை புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மடக்கி பிடித்தார். அந்த ஆட்டோக்களை ஓட்டி வந்த டிரைவர்களுக்கு அபராதம் விதித்தார். அதேப்போல் கடலூர் சண்முகம் பிள்ளை தெருவில் அளவுக்கு அதிகமாக மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஷேர் ஆட்டோவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் நேற்று காலையில் மடக்கி பிடித்தார். அந்த ஷேர் ஆட்டோவில் 20 மாணவ-மாணவிகள் இருந்தனர். இதனால் அந்த ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோ டிரைவர் குமார கிருஷ்ணனுக்கு 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவருடைய ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யுமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதேப்போல் அதே தெருவில் செல்போனில் பேசிக்கொண்டே ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்