நெல்லைக்கு வந்த தாமிரபரணி புஷ்கர விழா விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு வரவேற்பு

நெல்லைக்கு வந்த தாமிரபரணி புஷ்கர விழா விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Update: 2018-07-19 22:00 GMT
நெல்லை, 

நெல்லைக்கு வந்த தாமிரபரணி புஷ்கர விழா விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தாமிரபரணி புஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெறும். அதன்படி வருகிற அக்டோபர் 11-ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது. 149 தீர்த்த தலங்களில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்கான முயற்சிகளை அகில பாரத துறவியர் சங்கம் மற்றும் தாமிரபரணி புஷ்கர கமிட்டியினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு பாளையங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பார்த்ததீர்த்த சுவாமி தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன.

ரத யாத்திரை

பின்னர் அங்கிருந்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ரத யாத்திரை ஊர்வலம் புறப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஓசூர், ஒகேனக்கல், பென்னகரம் வழியாக சேலம் சென்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மல்லசமுத்திரம், திருசெங்கோடு, திண்டுக்கல் வழியாக மதுரை வந்தது.

அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், தென்காசி, ஆலங்குளம் வழியாக நேற்று மாலை நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை வந்தடைந்தது.

பக்தர்கள் வரவேற்பு

கோவிலில் தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் வீதி உலா நடந்தது. பின்னர் அந்த சிலைகள் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டன. இந்த ரத யாத்திரைக்கு பக்தர்கள் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ரத யாத்திரை நெல்லை டவுன் 4 ரத வீதிகளையும் சுற்றி வந்தது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் சென்றது.

இந்த ரதயாத்திரை வரவேற்பு நிகழ்ச்சியில் தாமிரபரணி புஷ்கர கமிட்டி தலைவர் சுவாமி ராமாந்தா, செயலாளர் முத்தையா, ஒருங்கிணைப்பு குழு செயலாளர் குமாரராஜா, துணை தலைவர் ரத்தினவேல், பொருளாளர் வீரபாகு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்