மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 2½ அடி உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2½ அடி உயர்ந்துள்ளது.

Update: 2018-07-19 21:30 GMT
நெல்லை, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2½ அடி உயர்ந்துள்ளது.

தொடர் மழை

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. அங்கு கன மழையாக பெய்வதால் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதையொட்டி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் குண்டாறு, கருப்பாநதி, கடனாநதி, ராமநதி, அடவிநயினார் ஆகிய 5 அணைகள் நிரம்பி விட்டன. அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கடனா நதி அணைக்கு வினாடிக்கு 168 கன அடியும், ராமநதி அணைக்கு 40 கன அடியும், கருப்பாநதி அணைக்கு 100 கன அடியும், குண்டாறு அணைக்கு 48 கன அடியும் தண்ணீர் வரத்து உள்ளது. இந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் வருகிறது. இதில் 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் குண்டாறு பகுதியில் 16 மில்லி மீட்டர் மழையும், அடவிநயினார் அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும், கடனா நதி, ராமநதி அணை பகுதிகளில் தலா 2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

பாபநாசம் அணை

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் காரையாறு அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த அணைக்கு வினாடிக்கு 2,725 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 110.30 அடியாக இருந்தது. இது நேற்று காலை நிலவரப்படி 2½ அடி உயர்ந்து 112.75 அடியாக இருந்தது. பாபநாசம் காரையாறு அணை மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து ஒருங்கிணைந்த நிலையில் கீழணை வழியாக வினாடிக்கு 1,405 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 336 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதில் 300 கன அடி தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் கால்வாயிலும், 75 கன அடி தண்ணீர் மணிமுத்தாறு பெருங்காலிலும் திறந்து விடப்பட்டு உள்ளது.

கால்வாய்களில் தண்ணீர் திறப்பு

தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ள தண்ணீர் கால்வாய்களில் பாசனத்துக்காக திருப்பி விடப்பட்டு உள்ளது. வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் வினாடிக்கு 54 கனஅடி, தெற்கு கோடை மேலழகியான் கால்வாயில் 26 கன அடி, நதியுண்ணி கால்வாயில் 69 கனஅடி, கன்னடியன் கால்வாயில் 250 கன அடி, கோடகன் கால்வாயில் 104 கன அடி, பாளையங்கால்வாயில் 108 கன அடி, திருநெல்வேலி கால்வாயில் 90 கன அடி, மருதூர் கீழ கால்வாயில் 262 கன அடி, ஸ்ரீவைகுண்டம் தெற்கு கால்வாயில் 266 கன அடி, வடக்கு கால்வாயில் 360 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்