பல்லடம்-கோவை ரோட்டில் விரிவுபடுத்தப்படாத சாலைகளால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

பல்லடம்-கோவை ரோட்டில் விரிவுபடுத்தப்படாத சாலைகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Update: 2018-07-19 21:30 GMT
திருப்பூர்,

பல்லடத்திற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பல்லடம் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல்லடத்தின் மிக முக்கிய சாலையாக பல்லடம்-கோவை சாலை இருந்து வருகிறது.

இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகிறது. பல்லடம்-கோவை சாலையில் அரசு ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள், பள்ளி கூடங்கள், கோவில்கள் அதிக உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குறுகிய அளவிலான சாலை மேம்படுத்தாமல் இருப்பதால் இந்த அவல நிலை தொடருவதாகவும், இதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது.

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும், விசைத்தறிகள் அதிக அளவு இயங்கி வருகின்றன. தொழிலாளர்கல் அதிகம் உள்ளதால் இங்குள்ள சாலைகள் எப்போது பரபரப்புடனேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்ப இதுவரை சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையில் மக்கள் தொகையும் வாகனங்களும் இருக்கும் போது பயன்படுத்தப்பட்ட போடப்பட்ட சாலைகளே தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் சாலை மிக அபாயகரமானதாக உள்ளது. ஒரு வழிச்சாலையாக இருந்து வந்த இந்த ரோடு இதுவரை விரிவாக்கம் செய்யப்படவில்லை. தற்போது இந்த ரோட்டின் நடுவில் இரும்பு தடுப்புகளை அமைத்து இருவழி சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து வெளியேறும் ஆம்புலன்ஸ்களும், ஆஸ்பத்திரிக்கு வரும் ஆம்புலன்ஸ்களும், வாகனங்களும் பல நேரங்களில் நெரிசலில் சிக்கி விடுகின்றன. தினந்தோறும் விபத்துகளும் ஏற்படுகிறது. கடந்த ஒருசில திங்களுக்கு முன்பு இந்த ரோட்டை கடக்க முயன்ற பெண் ஒருவர் வாகனம் மோதி இறந்தார். இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகிறது. ஆங்காங்கே இணைப்பு ரோடுகளும் இருப்பதால் அதில் இருந்து வரும் வாகனங்களும் இந்த பிரதான ரோட்டில் வந்து செல்லும் போது சிக்கல்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை விரிவுபடுத்துவதுடன், சேதமடைந்த நிலையில் உள்ள ரோடுகளை சீரமைத்து விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்