திருச்சி அருகே நிலம் வாங்கி தருவதாக விவசாயியிடம் ரூ.10 லட்சம் மோசடி

திருச்சி அருகே நிலம் வாங்கி தருவதாக விவசாயியிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-07-19 22:15 GMT
திருச்சி,

திருச்சி திருவெறும்பூர் தென்றல் நகரை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகன் ராதா(வயது49). விவசாயி. இவர் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என எண்ணினார். அதற்காக ரியஸ் எஸ்டேட் புரோக்கர்களான திருச்சி மாரியம்மன் கோவில் தெற்கு பகுதியை சேர்ந்த சரவணன்(47), ஆலந்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்த முருகன்(42) ஆகியோரை அணுகினார். அவர்கள் இருவரும் ராதாவுக்கு திருச்சி சிந்தாமணியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.

அவர், திருச்சி கல்லணை ரோட்டில் உள்ள வேங்கூரில் வீட்டுமனைக்கான இடம் இருப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அந்த இடத்தை கிரயம் செய்து கொள்வதாக கூறிய ராதா, கடந்த 7.11.2015 அன்று சிந்தாமணியில் உள்ள ஓட்டலில் வைத்து 3 பேரிடமும் ரூ.10 லட்சத்தை கொடுத்தார்.

2 ஆண்டுகளாகியும் அந்த இடத்தை சரவணன், முருகன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் கிரயம் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், அந்த இடம் குறித்து முழுமையாக விசாரித்தபோது, அது வீட்டு மனைக்கான அங்கீகாரம் பெறாத மனை என்பது தெரியவந்தது. எனவே, வீட்டுமனைக்காக ரூ.10 லட்சம் கொடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராதா, 3 பேரையும் சந்தித்து பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அவதூறாக பேசியதுடன், பணத்தை தரமுடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் ராதா வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஏற்ற ஐகோர்ட்டு நீதிபதி, நிலம் மோசடி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். அவர், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

அதன்பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சரவணன், முருகன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் மீது இ.பி.கோ. 417, 420, 294(பி) மற்றும் 506(1) ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்