அரசு பள்ளிக்கு ரூ.1½ லட்சத்தில் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்

பாபநாசம் அருகே அரசு பள்ளிக்கு ரூ.1½ லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் வழங்கினர்.

Update: 2018-07-19 22:45 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள இனாம் கிளியூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் 100 பேர் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நகல் எடுக்கும் எந்திரம்(ஜெராக்ஸ்), பிரிண்டர், மேஜை, 2 பீரோக்கள், கிரிக்கெட் பேட், டென்னிஸ் பேட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள், புத்தகங்கள் மற்றும் வை-பை வசதி உள்பட ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சீர்வரிசையாக கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்டது. மொத்தம் 25 வகையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சி நேற்று இனாம்கிளியூரில் நடந்தது. நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயலட்சுமி, மகாலட்சுமி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் அருண், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா கூறியதாவது:- எங்கள் பள்ளியின் கல்வி வளர்ச்சியில் கிராம மக்கள் எப்போதும் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். தற்போது கிராம மக்கள் தங்களால் முடிந்தவற்றை சீர்வரிசையாக வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களை வாகனங்கள் மூலம் பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலம் பள்ளியை சென்றடைந்ததும், மாணவ, மாணவிகளிடம் சீர் வரிசை பொருட்கள்வழங்கப்பட்டன. 

மேலும் செய்திகள்