தெற்கு ஆசிய சிலம்பு போட்டியில் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

கன்னியாகுமரியில் நடந்த தெற்கு ஆசிய சிலம்பு போட்டியில் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2018-07-19 22:00 GMT
காட்பாடி,

தெற்கு ஆசிய அளவிலான சிலம்பு போட்டி கன்னியாகுமரியில் கடந்த 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடந்தது. இதில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் இருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சுருதிக், சரண், விக்ரமன் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் என மொத்தம் 16 பேர் பயிற்சியாளர் சந்தோஷ்குமார் தலைமையில் பங்கேற்றனர்.


இதில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் சுருதிக் இரட்டை வாள் வீச்சு மற்றும் வேல் கம்பு வீச்சு ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஒற்றை நடுக்கம்பு வீச்சில் மாணவர்கள் சரண், விக்ரமன் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

சாதனை படைத்த காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காட்பாடி பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் நரேந்திரகுமார் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளை பாராட்டி பேசினார்.

விழாவில் உதவி தலைமையாசிரியைகள் சரஸ்வதி, மஞ்சுளா மகிமைச்செல்வி, என்.சி.சி. முதன்மை அலுவலர் க.ராஜா மற்றும் ஆசிரியர்கள் பலர் பாராட்டி பேசினர்.

மேலும் செய்திகள்