பல்கலைக்கழக மானியக்குழு முறை ஒழிப்பு மசோதாவை எதிர்த்து கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக்குழு முறை ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி அரசு கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-19 22:30 GMT
சுந்தரக்கோட்டை,

பல்கலைக்கழக மானியக்குழு முறை ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையை கண்டித்தும் மன்னார்குடி அரசு கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு கிளை தலைவர் பேராசிரியர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் கிளை துணை தலைவர் ராஜாசந்திரசேகர், இணைச்செயலாளர் சிவகுமரன் உள்ளிட்ட 50 பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் 7-வது ஊதிய திருத்தத்தை அனைத்து மாநிலங்களும் சீராக ஒரே காலத்தில் அமல்படுத்த ஏதுவாக மத்திய அரசு 100 சதவீத நிதியை மாநிலங்களுக்கு வழங்கவேண்டும். அனைத்து மாநிலங்களும் பல்கலைக்கழக மானியக்குழுவின் 7-வது ஊதிய திருத்தத்தினை அமல்படுத்தக்கோரி நினைவூட்டு கடிதம் பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் மாநிலங்களுக்கு அனுப்பபட வேண்டும். அனைத்து மாநிலங்களும் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

தற்காலிக ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள, கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி நிதி ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம், பணிநிலை ஆணை வழங்கப்படவேண்டும்.

உடற்கல்வி இயக்குனர், நூலகர் மற்றும் பயிற்றுனர்களுக்கு ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய ஆணை வழங்கப்படவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்றுவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகள் களையப்படவேண்டும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தர வாரியான தன்னாட்சி அதிகாரம் நீக்கப்படுவதோடு, தற்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டுள்ள உயர்கல்வி நிதி வழங்கல் நிறுவனம் மற்றும் உயர்கல்வி அதிகார ஒழுங்குமுறை நிறுவனம் உடனடியாக திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன. 

மேலும் செய்திகள்