கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்க நிரந்தர தடை நகராட்சி ஆணையாளர் தகவல்

கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும், வாங்கவும் நிரந்தர தடை விதிக்கப்படுகிறது என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

Update: 2018-07-19 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கிருஷ்ணகிரியில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதித்துள்ளது. தற்போது தமிழக அரசு வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற கலெக்டர் கதிரவன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனால் இன்னும் ஒரு வாரத்தில் நகரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. எனவே, அனைத்து கடைகளிலும் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற கேட்டுக்கொள்கிறேன். இதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கேசவன், நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், மேலாளர் முரளிதரன், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், குமார், சீனிவாசன், கிரி மற்றும் அனைத்து வணிக நிறுவனங்கள், மருந்து கடைகள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்