செங்கல்பட்டு பஸ் நிலையம் அருகே சாலையில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், உத்திரமேரூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக செங்கல்பட்டு நகராட்சி விளங்கி வருகிறது.

Update: 2018-07-19 22:53 GMT
செங்கல்பட்டு,

விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லவும் மட்டுமின்றி, போக்குவரத்து, மருத்துவ வசதிகளுக்காகவும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு வாகனங்களில் செங்கல்பட்டுக்கு வந்து செல்கின்றனர்.

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஷேர் ஆட்டோவில் அதிக அளவில் பயணிக்கின்றனர். செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.

ஆனால், இதில் விதிமுறைகளை மீறி 10 பயணிகளுக்கு மேல் ஏற்றிக்கொள்கின்றனர். இதன் காரணமாக தொடர் விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. மேலும், செங்கல்பட்டு பஸ் நிலையம் அருகே பிரதான கடைவீதி மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், தினசரி சந்தை ஆகியவை இயங்கும் மதுராந்தகம் ஜி.எஸ்.டி. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் ஏராளமான ஆட்டோக்களை நிறுத்திக் கொள்கின்றனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு கூட வழி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, செங்கல்பட்டில், விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்