தினம் ஒரு தகவல் : பறவைகள் பாதுகாப்பு

மனிதச் செயல்பாடுகள் அதிவேக வளர்ச்சி கண்டு வருவதால், இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. அதன் பலனாக உயிரினங்கள் முற்றிலும் அற்றுப் போகின்றன.

Update: 2018-07-20 03:30 GMT
பொருளாதார வளர்ச்சி தொடர்பான வேட்கையால் பூமியில் வாழும் மற்ற உயிரினங்கள், சுற்றுச்சூழல் நலனை நாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறோம். இது நமது சூழலியல் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பறவை சரணாலயங்களுக்குப் பாதுகாப்பு தருவதன் மூலம் மட்டும், பறவைகளைப் பாதுகாத்துவிட முடியாது. எடுத்துக்காட்டுக்கு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில், சரணாலயத்தில் உள்ள பறவைகள் சார்ந்துள்ள மற்றப் பகுதிகள் வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன. அந்த விளைநிலங்களும் மற்ற பகுதிகளும் தனியாருக்குச் சொந்தமானவை. இந்தப் பகுதிகளில்தான் பறவைகள் இரை தேடும்.

அந்த நிலங்கள் வீட்டுமனைகளாகவோ, தொழிற்சாலைகளாகவோ மாற்றப்பட்டு வருவதால், பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் போகும். சரணாலயங்கள் பற்றி யோசிக்கும்போது, இதையும் சேர்த்து யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் 34 பகுதிகள் இவ்வாறு உள்ளன. இந்தப் பகுதிகளில் பாதிக்கு மேற்பட்டவை காட்டுயிர், பறவை சரணாலயங்கள் தான். மற்றவை மிகக் குறைந்த பாதுகாப்பு அல்லது பாதுகாப்பே இல்லாத சதுப்புநிலங்களும் காடுகளும். இவற்றையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். பெரும்பாலான முக்கியப் பறவை பகுதிகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக, முழுமையான தகவல் பதிவும் செய்யப்படவில்லை.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியப் பறவைப் பாதுகாப்பு அமைப்பு தமிழகத்தில் முழுமையாகச் செயல்படும் நிலையில் இல்லை. இதற்குக் காரணம், குறைவான உறுப்பினர்கள் இருப்பதுதான்.

புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதுடன், மாநிலத்தில் உள்ள முக்கியப் பறவை பகுதிகளின் நிலைமையை ஆராய்ந்து, பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்தலாம். 

மேலும் செய்திகள்