நிதி ஒதுக்கல் மசோதாவுக்கு நிபந்தனையுடன் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்

பா.ஜ.க.வின் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிதி ஒதுக்கல் மசோதாவுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-22 00:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. பட்ஜெட் மீதான விவாதம், பின்னர் துறை ரீதியிலான விவாதத்தின்போது ஆட்சியாளர்கள் துறைகளுக்கும், பட்ஜெட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்து உறுப்பினர்களின் அனுமதியை பெறுவர். அதன்பின் கவர்னருக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கல் மசோதா அனுப்பி வைக்கப்படும். அதற்கு அவர் ஒப்புதல் கொடுப்பார். அது சட்டசபையில் சபாநாயகரால் தெரிவிக்கப்பட்டு, நிறைவேற்றி பட்ஜெட் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படும்.

ஆனால் அதற்கு முன்பே பட்ஜெட் கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்ததையொட்டி அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்காக 27–ந்தேதி வரை நடைபெற இருந்த சட்டசபை கூட்டத்தொடர் ஆட்சியாளர்களால் கடந்த 19–ந்தேதியுடன் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் நிதி ஒதுக்குதல் மசோதாவுக்கு கவர்னர் கிரண்பெடியின் ஒப்புதல் பெறாமலேயே சட்டசபையை சபாநாயகர் வைத்திலிங்கம் காலவரையின்றி ஒத்திவைத்தார். சட்டசபையில் ஏற்கனவே பெறப்பட்டு இருந்த இடைக்கால பட்ஜெட்டிற்கான அனுமதி இந்த மாதத்துடன் முடிவடைவதால் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியர்களுக்கு பென்‌ஷனும் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் பட்ஜெட்டிற்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? மாட்டாரா? என்பது குறித்து அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பம் உருவானது.

இந்தநிலையில் வழக்கம்போல் வார நாட்களில் நடத்தப்படும் கள ஆய்வுப்பணியை கவர்னர் கிரண்பெடி நேற்று காலை மின்துறை அலுவலகத்தில் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுச்சேரியில் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதை சட்டசபையில் அமல்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து பட்ஜெட் நிதி ஒதுக்கல் மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளேன். இதற்கான கோப்பு நேற்று (நேற்று முன்தினம்) கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே 27–ந் தேதி வரை சட்டமன்றத்தை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே சபாநாயகர் விரைவில் சட்டமன்றத்தை கூட்டி பட்ஜெட் நிதி ஒதுக்கல் மசோதாவிற்கு அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவு நகல் புதுவை கவர்னர் மாளிகைக்கு வந்துள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தி உள்ளது. இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு எந்த தடையாணையும் வழங்கவில்லை. எனவே புதுவை சட்டசபையும், சபாநாயகரும் இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபை நடவடிக்கைகளில் பங்குபெறச்செய்து கடமை ஆற்ற அனுமதிக்க வேண்டும்.

பட்ஜெட் கூட்டத்தொடரை மீண்டும் கூட்டி சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச்செய்து நிதி ஒதுக்கல் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று புதுவை அரசுக்கும், சபாநாயகருக்கும் கவர்னர் நிபந்தனை விதித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்