பொன்மகள் வந்தாள்.. புதுவாழ்க்கை பெற்றாள்..

இந்தியாவில் நடந்த ஒரு திருமணம் எல்லைகளை தாண்டி பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகளை குவித்திருக்கிறது.

Update: 2018-07-22 07:13 GMT
மதங்களை கடந்த இந்த மனிதநேய திருமணத்தின் பின்னணியை தெரிந்து கொள்வதற்கு சில வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

துபாயில் உள்ள டெலிவிஷன் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்தவர் மதனன். 32 வருடங்களாக அங்கு பணிபுரிந்தவர் 2007-ம் ஆண்டு மனைவி தங்க மணியுடன் தனது சொந்த ஊரான திருச்சூருக்கு வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் முகேஷ், மஸ்கட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்க்கிறார். இரண்டாவது மகன் முகில், குவைத் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். இருவரும் குடும்பத்துடன் அந்தந்த நாடுகளில்தான் வசிக்கிறார்கள். இரண்டு மகன்களும் அருகாமையில் இல்லாததும், பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கமும் மதனன் -தங்கமணி தம்பதியரை வாட்டியது.

அக்கம் பக்கத்தினரிடமும் தங்களுக்கு பெண் குழந்தை இல்லாத வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ‘வீடு என்று இருந்தால் அங்கே பெண் குழந்தை இருக்க வேண்டும். அதன் சிரிப்பு சத்தத்தில் உருவாகும் மகிழ்ச்சியை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று ஏக்கத்தை பகிர்ந்திருக் கிறார்கள். அப்போது கதிஜா என்ற சிறுமியை பற்றிய தகவல் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அவளது அம்மா பெயர் சுபேதா. அப்பா பெயர் அப்துல்லா. கஜிதாவுக்கு அக்காள் ஒருவர் இருக்கிறார்.

அப்துல்லா குடும்பத்தை தவிக்க விட்டுவிட்டு பல வருடங்களுக்கு முன்பே காணாமல் போய்விட்டார். அதன் தாக்கமாக சுபேதாவுக்கு மன அழுத்த பாதிப்பும் இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்ப்பதற்காக அருகில் உள்ள ஓட்டலில் மீன் நறுக்கி கொடுப்பது, மசாலா அரைப்பது போன்ற வேலைகளை செய்து வந்திருக்கிறார். அதனால் உணவு கிடைத்திருக்கிறது. ஓட்டல் வேலைபோக மீதி நேரங்களில் புல் அறுத்தும் வருமானத்திற்கு வழி தேடியிருக்கிறார். கதிஜாவையும், அவருடைய சகோதரியையும் சமூக அமைப்பு ஒன்றின் உதவியோடு படிக்க வைத்திருக்கிறார்.

இந்தநிலையில் கதிஜாவின் அக்காளுக்கு திருமணம் நடந்திருக்கிறது. வசதியான ஒருவருக்கு மணம் முடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மன வளர்ச்சி குறைபாடு கொண்டவர். அதனால் அந்த பெண், ஒரு குழந்தை பிறந்த பிறகு அவரோடு தொடர்ந்து வாழ முடியாமல் திரும்பி வந்து தாயாரோடு சேர்ந்துவிட்டார்.

அந்த குடும்பத்தின் பரிதாப நிலையை கேள்விப்பட்ட மதனன் - தங்கமணி தம்பதியர் சுபேதாவை தேடி சென்று சந்தித்திருக்கிறார்கள். அப்போது கதிஜா 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்திருக்கிறார். மகள் இல்லாத குறையை கதிஜா மூலம் போக்குவதற்கு மதனன் - தங்கமணி தம்பதியர் முடிவெடுத்திருக் கிறார்கள். தங்களது விருப்பத்தை சுபேதாவிடம் எடுத்து கூறி சம்மதம் வாங்கிவிட்டு, கதிஜாவுக்கு கைசு என்ற புதிய பெயர் வைத்து தங்களோடு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

கஜிதா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவருடைய மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்து அவர் பிரார்த்தனை செய்வதற்கு தனி அறை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்கும், நோன்பு திறப்பதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய அன்பான கவனிப்பு கதிஜாவின் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்துவிட்டது. ஏழ்மை நிலையில் இருந்தவர் வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்். பெண் குழந்தை இல்லாத ஏக்கம் கதிஜா மூலம் தீர்த்துவிட்ட மன நிறைவும் மதனனிடம் ஏற்பட்டது. அவர் சொல்கிறார்:



‘‘இவள், எங்களின் மூன்றாவது குழந்தை. அவளால் எங்கள் வாழ்வும் மகிழ்ச்சியாக மாறிவிட்டது. அவளை சினிமா, ஓட்டல் உள்பட எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வோம். அவளுக்கு தேவையான அனைத்து வசதி களையும் செய்து கொடுத்தோம். துக்க வீடுகளுக்கு மட்டும் அழைத்து செல்ல மாட்டோம். வீட்டில் சும்மா இருக்காமல் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தையல் பயிற்சிக்கு அனுப்பினோம். இப்போது நன்றாக ஆடைகளை தைக்கிறாள்’’ என்கிறார்.

கதிஜா திருமண பருவத்தை எட்டியதும் மாப்பிள்ளை தேட தொடங்கி இருக்கிறார்கள். அவளுடைய மத சம்பிரதாயப்படித்தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். நல்ல மாப்பிள்ளையாக அமைய வேண்டும் என்று நிறைய இடங்களில் வரன் பார்த்திருக்கிறார்கள். இறுதியில் அக்பர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

‘‘அவளுடைய மத சம்பிரதாயப்படித்தான் திரு மணத்தை நடத்த விரும்பினோம். அதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றினோம். அந்த சமூக பெரியவர்களின் ஒத்துழைப்போடு முழு அனுமதி பெற்று திருமணத்தை நடத்தி வைத்தோம்’’ என்கிறார்கள்.

கதிஜாவை கடமைக்காக வளர்த்து, யாரோ ஒருவருடைய கையில் ஒப்படைத்துவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும் மனப்பூர்வமாக செய்திருக்கிறார்கள். கதிஜாவுக்கு தேவையான பணம், நகைகளை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அவருடைய தாயார், சகோதரி மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். கதிஜாவின் கணவர் அக்பர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்தவர். இப்போது சொந்த ஊரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

கதிஜாவுக்கு தாயார் ஸ்தானத்தில் இருக்கும் தங்கமணி சொல்கிறார்:

‘‘எங்கள் மகள் கணவனோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறாள். அதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவள் எங்கள் வீட்டை விட்டு போய்விட்ட சின்ன வருத்தம் மட்டும் இருக்கிறது. அவள் வீட்டில் இருந்ததுவரை பொழுது சந்தோஷமாக கழிந்தது. 8 ஆண்டுகள் அவள் எங்களோடு இருந்தாள். சிரிப்பும், சந்தோஷமுமாக நாட்கள் நகர்ந்தது. வீட்டின் முற்றத்தில் உள்ள குளத்தில் மீன்களுக்கு இரை போட்டு அவைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவாள்.‘லவ் பேர்ட்ஸ்’ பறவைகளையும் வளர்த்துவந்தாள். எல்லோரிடமும் அன்பாக பழகுவாள். அவள் திருமணமாகி சென்ற பிறகு அவள் வளர்த்த பறவைகளை வேறொருவருக்கு வளர்க்க கொடுத்துவிட்டோம். அவள் சென்ற பிறகு வீடு வெறுமையாக இருக்கிறது. நாங்கள் மீண்டும் தனியாக வசிக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவளை பார்க்க செல்கிறோம். அவ்வப்போது அவளை வீட்டிற்கு கூட்டி வருவோம். இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் அதிகம் பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறாள்’’ என்கிறார்.

கதிஜா மீது மதனன் - தங்கமணி தம்பதியர் காட்டும் அன்பு, அக்கறைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. ஏராளமான பிர பலங்களும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இவர்கள் நடத்திய கருணை திருமணம் எல்லை கடந்து பாகிஸ்தானில் உள்ள பிரபலமான சேனல்களிலும் செய்தியாகி விட்டது.

‘‘8 ஆண்டுகளுக்கு முன்பு அவளை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தபோது அக்கம்பக்கத்தினர் முகம் சுளித்தார்கள். வேற்று மதத்தை சார்ந்த பெண்ணை அங்கீகரிக்க அவர்கள் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அவளை வீட்டில் வேலைக்காரியாகத்தான் நடத்துவோம் என்றும் சிலர் நினைத்தார்கள். ஆனால் அவளுக்கு திருமணம் செய்து வைத்ததை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். நாங்கள் அவளுக்கு தாய்-தந்தையாக இருப்பதை பார்த்து பெருமிதம் கொண்டார்கள்’’ என்கிறார்கள், மதனன் - தங்கமணி தம்பதியர்.

இப்போது கர்ப்பிணியாக இருக்கும் கதிஜாவின் மீது கூடுதல் அன்பை பொழிந்து அக்கறையுடன் கவனித்து வருகிறார்கள். அடுத்த வாரிசை எதிர்பார்த்து ஆவலோடும் காத்திருக்கிறார்கள். 

மேலும் செய்திகள்