காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

காவிரி நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பரிசல் இயக்க 14-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2018-07-22 23:00 GMT
பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்வார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் மெயின் அருவில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்தநிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததாலும், விடுமுறை நாள் என்பதாலும் நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் போலீசார் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயிலில் கயிறு கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியதால் நேற்று ஒகேனக்கல் மெயின் அருவி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆறு எங்கு பார்த்தாலும் கடல் போல் காட்சி அளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நுழைவுவாயில், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் நின்று கரைபுரண்டு ஓடிய காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்து சென்றனர். மேலும் அவர்கள் நடைபாதையில் ஓடிய தண்ணீரை அள்ளி தலை மீது தெளித்து கொண்டனர்.

காவிரி ஆற்றில் பரிசல் இயக்க 14-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் போலீசார் ஒலிபெருக்கி மூலம் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம், இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்