முதியவர் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை: கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை

வேலூரில் முதியவரை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்த கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-07-25 22:46 GMT
வேலூர், 


வேலூர் பாகாயம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 41), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி வேணி (35). சரவணனுக்கும், வீட்டின் அருகே வசித்து வரும் மற்றொரு கட்டிட மேஸ்திரி ஆறுமுகத்துக்கும் (42) முன்விரோதம் இருந்து வந்தது. சரவணன் வீட்டை புதுப்பிக்க தனது வீட்டின் முன்பகுதியில் மணல், ஜல்லியை கொட்டி வைத்திருந்தார். அதனை, ஆறுமுகம் 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி தெருவில் வீசி உள்ளார்.

இதைக்கண்ட வேணி, ஆறுமுகத்தை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் திடீரென வேணியை மணலில் தள்ளிவிட்டு, கையால் தாக்கி உள்ளார். இதனை பார்த்த சரவணனின் தந்தை சின்னசாமி அங்கு வந்து ஆறுமுகத்தை தட்டிக்கேட்டுள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அங்குக் கிடந்த இரும்புக்கம்பியால் முதியவர் சின்னசாமியை சரமாரியாக தாக்கினார்.

அதில் படுகாயம் அடைந்த முதியவர் சின்னசாமியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சின்னசாமியை சென்னைக்குக் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து, அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்து நேற்று தீர்ப்புக்கூறினார். அதில், முதியவர் சின்னசாமியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த கட்டிட மேஸ்திரி ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அண்ணாமலை ஆஜரானார். இதையடுத்து பலத்த காவலுடன் ஆறுமுகம் அழைத்துச் செல்லப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்