நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: பவானிசாகர் அணை நீர்மட்டம் 96 அடியாக உயர்வு

நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது.

Update: 2018-07-26 22:40 GMT

பவானிசாகர்,

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் 15 அடி சேறும், சகதியும் போக அணை நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியது. இதன்காரணமாக அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்ததாலும், பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீராலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் மாலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 597 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 95.85 அடியாகவும் இருந்தது. நேற்று காலை 8 மணி அளவில் வினாடிக்கு 4 ஆயிரத்து 869 கனஅடி நீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.13 அடியாக இருந்தது. மதியம் 1 மணி அளவில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 6 ஆயிரத்து 486 கன அடிநீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 96.21 அடியாக உயர்ந்தது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,600 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.



மேலும் செய்திகள்