ஆயுள்தண்டனை கைதிகளை மொத்தமாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி பிறப்பித்த அரசாணையின்படி ஆயுள் தண்டனை கைதிகளை மொத்தமாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2018-07-26 23:54 GMT
மதுரை,

மதுரை புதூரை சேர்ந்த ஞானேஸ்வரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 வருடங்களுக்கும் அதிகமாக ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 1,600 கைதிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி 1-ந்தேதி அரசாணை வெளியிட்டது.

இதை கேள்விப்பட்ட கைதிகளின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பிப்ரவரி 25-ந்தேதி 67 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதுபோல பகுதி, பகுதியாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி ஒரே நேரத்தில் 1,408 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.


தற்போது பகுதி-பகுதியாக விடுதலை செய்யப்படுவதால், விடுதலையாகத் தகுதி பெற்ற கைதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், விடுதலை ஆக தகுதியுடைய 50 கைதிகள் இறந்துவிட்டனர்.

எனவே கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி 10 ஆண்டுகள் ஜெயிலில் தண்டனை அனுபவித்த ஆயுள்தண்டனை கைதிகளை ஒரே நேரத்தில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜோசப்ஜெர்ரி ஆஜரானார். இந்த வழக்கை 4 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

மேலும் செய்திகள்