ராமநகரில் இருந்து பெங்களூருவுக்கு பா.ஜனதாவினர் பாதயாத்திரை

விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி ராமநகரில் இருந்து பெங்களூருவுக்கு பா.ஜனதாவினர் நேற்று பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

Update: 2018-07-27 00:39 GMT
ராமநகர்,

முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து அவர்கள் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். அவர், தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றால் 24 மணிநேரத்தில் விவசாயிகள் கடன் ரூ.53 ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்வதாக ஜனதாதளம்(எஸ்) தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். ஆனால் பட்ஜெட்டில் விவசாயிகள் கடனை முதல்-மந்திரி குமாரசாமி தள்ளுபடி செய்திருந்தாலும், முழுவதுமாக தள்ளுபடி செய்யவில்லை.

இதனால் விவசாய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்யும்படி பா.ஜனதா தலைவர்கள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், விவசாய கடன் ரூ.53 ஆயிரம் கோடியையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், ராமநகரில் பட்டுக்கூடுகளுக்கு ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் இருந்து நேற்று பா.ஜனதா கட்சியின் விவசாய பிரிவினர் பாதயாத்திரையாக பெங்களூருவுக்கு புறப்பட்டார்கள்.

முன்னதாக சென்னப்பட்டணாவில் உள்ள கெங்கல் ஆஞ்சனேய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்து பா.ஜனதாவினர் வழிபட்டனர். பின்னர் ஆஞ்சனேய சுவாமி கோவிலில் இருந்து பெங்களூருவுக்கு பா.ஜனதாவினர் பாதயாத்திரை மேற்கொண்டனர். நேற்று காலையில் தொடங்கிய பாதயாத்திரை நாளை (சனிக்கிழமை) பெங்களூருவை வந்தடைகிறது. பாதயாத்திரையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான ரேணுகாச்சார்யா, குமார் பங்காரப்பா மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னப்பட்டணாவில் இருந்து பெங்களூருவுக்கு பாதயாத்திரை வந்ததும் குமரகிருபா ரோட்டில் உள்ள கிருஷ்ணா இல்லத்திற்கு சென்று முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து விவசாய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் மனு கொடுக்க உள்ளனர். பா.ஜனதாவினர் மேற்கொண்டுள்ள பாதயாத்திரையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

மேலும் செய்திகள்