மாநில அந்தஸ்து வேண்டாம் என்று சொல்ல இவர் யார்? கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கிரண்பெடி அரசியலுக்கு வரலாம் - நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டாம் என்று சொல்வதற்கு கவர்னர் கிரண்பெடி யார்? அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வரலாம் என்று முதல்–மந்திரி நாராயணசாமி ஆவேசமாக கூறினார்.

Update: 2018-07-28 00:15 GMT

புதுச்சேரி,

புதுவை முதல்–மந்திரி நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். அதன்பின் டெல்லி சென்று தலைவர்களிடம் மனு கொடுத்தோம். புதுச்சேரியை போன்று யூனியன் பிரதேசங்களாக இருந்த கோவா, மணிப்பூர், மிசோராம், மேகாலயா போன்றவை எல்லாம் மாநில அந்தஸ்தை பெற்றுவிட்டன.

மாநிலங்களுக்கான அதிகாரமும் புதுச்சேரிக்கு இல்லாததால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசுக்கு பிரச்சினை உள்ளது. எல்லா கோப்புகளையும் கவர்னர் திருப்பி அனுப்புகிறார். மக்கள் அரசுக்கு உள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறார்.

கடந்த காலங்களில் புதுவை சட்டமன்றத்தில் மாநில அந்தஸ்து கேட்டு எத்தனையோ தீர்மானங்கள் போட்டுள்ளார்கள். ஆனால் அதை டெல்லிக்கு அனுப்பமாட்டார்கள். நாங்கள் அதை டெல்லிக்கு அனுப்பியதோடு, நேரடியாக சென்றும் வலியுறுத்தினோம். மாநில அந்தஸ்துக்கான ஆயத்த வேலைகளை தொடங்கியுள்ளோம். தற்போது அதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது.

மாநில அந்தஸ்தை மற்ற பிராந்தியங்களில் உள்ள மக்கள் விரும்பவில்லை என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். அவரிடம் அவ்வாறு யார் சொன்னது? 4 பிராந்தியங்களும் இணைந்த மாநில அந்தஸ்தை நாங்கள் கேட்கிறோம். புதுச்சேரி இந்தியாவோடு இணைந்தபோது, அதன் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்று இந்தியா–பிரான்சு செய்துகொண்ட ஒப்பந்தம் உள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவேண்டாம் என்று சொல்ல இவர் (கவர்னர்) யார்? இவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவரா? மாநில அந்தஸ்து வேண்டாம் என்று மக்கள் சொன்னார்களா? வேண்டுமானால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நியாயமானதுதான் என்றும், அவர்களை மத்திய அரசு அழைத்து பேசவேண்டும் என்றும் முதல்–மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்