கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 74 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Update: 2018-07-28 00:33 GMT
மண்டியா,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதனால் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணைக்கும், மைசூருவில் அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் இரு அணைகளும் நிரம்பின.

இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போதும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் 124.80 கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நேற்று காலை நிலவரப்படி 124.10 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 45,331 கனஅடி நீர் வருகிறது. அதேவேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 48,780 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,283 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 27,262 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 26,200 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இரு அணைகளிலும் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்பட்டு வருவதால் காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோர மக்களின் இயல்புவாழ்க்கை கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 74,980 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்தை விட நேற்று இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 69,557 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்