தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-28 22:15 GMT
தாம்பரம்,

தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம், உள்நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தவிர மற்ற புறநோயாளிகள் சிகிச்சை, அவரசமில்லா அறுவை சிகிச்சை பணிகளை டாக்டர்கள் புறக்கணித்தனர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் டாக்டர் ஜெயலால் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாநில தலைவர்கள் டாக்டர் டி.என்.ரவிசங்கர், டாக்டர் பாலசுப்பிரமணியம், இந்திய மருத்துவ சங்க தாம்பரம் கிளை செயலாளர் டாக்டர் உமையாள் உள்பட ஏராளமான டாக்டர்கள் இதில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இந்திய மருத்துவ சங்கம் பெரம்பூர் கிளை சார்பாக கொளத்தூர், ரெட்டேரி, பெரம்பூர், பெரியார் நகர், வினாயகபுரம், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 200–க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சென்னை பெரம்பூர் கிளை தலைவர் டாக்டர் ஆறுமுகசாமி தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதில் 600–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். அவசர சிகிச்சையை தவிர வெளிப்புற நோய்களுக்கு சிகிச்சை அளிக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்