திசையன்விளை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் கைதானவர்

போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாலிபர் மீது நேற்று குண்டர் தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.

Update: 2018-07-31 21:00 GMT

திசையன்விளை,

திசையன்விளை அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாலிபர் மீது நேற்று குண்டர் தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.

மணல் கடத்தல்

திசையன்விளை அருகே உள்ள கூத்தங்குழியை சேர்ந்த சிலுவை அலங்காரம் மகன் சுபாஷ்(வயது31). இவர் மீது ஆற்று மணலை வாகனங்களில் ஏற்றி கடத்தியதாக 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த வாரம் திசையன்விளை அருகே லாரியில் அவர் ஆற்று மணலை கடத்தி சென்றார். அந்த லாரியை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் நிறுத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் லாரியை ஏற்றி அவர்களை கொல்ல முயன்றார். இதில் அவர்கள் தப்பினர்.

குண்டர் சட்டம் பாயந்தது

இது தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து அவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார்.

இதற்கான ஆவணங்களை நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ் மற்றும் சிறை அதிகாரிகளிடம் திசையன்விளை போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்