மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு எதிரொலி: 16 கண் பாலத்தின் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததன் எதிரொலியாக, 16 கண் பாலத்தின் வழியாக உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-08-01 00:04 GMT
மேட்டூர்,



கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொலியாக, மேட்டூர் அணை கடந்த 23-ந் தேதி தன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்ததால் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாகவும், தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது.

உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக, அதிகபட்சமாக வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 411 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 23 ஆயிரத்து 501 கனஅடியாக குறைந்தது. மதியம் நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.

அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் சுரங்கம் மற்றும் அணை மின்நிலையம் வழியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைவு எதிரொலியாக, நேற்று மதியம் 2 மணி முதல் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலம் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலத்தின் வழியாக தண்ணீர் வெளியேறுவதை காணவந்த மக்கள் கூட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 120.09 அடியாக இருந்தது. 

மேலும் செய்திகள்