தண்டவாளத்தை கடப்பதை தடுக்க தடுப்புச்சுவர் கட்ட எதிர்ப்பு

கொண்டலாம்பட்டி அருகே ரெயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடப்பதை தடுக்க தடுப்புச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-01 22:00 GMT
கொண்டலாம்பட்டி, 



சேலம் கொண்டலாம்பட்டி அருகே கலர்காடு என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர் வழியாக ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பகுதியில் தண்டவாளத்தை மக்கள் கடப்பதை தடுக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நிலையில் நேற்று காலை கலர்காட்டில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தையொட்டி தடுப்புச்சுவர் கட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் பலர் அங்கு திரண்டு வந்து இந்த பாதையை அடைத்து தடுப்புச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்தும் போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள், இந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டினால் தீரானூர், கொழிஞ்சிபட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல மிகவும் சிரமம் ஏற்படும். எனவே இந்த பகுதியில் தடுப்புச்சுவர் கட்டக்கூடாது என்று தெரிவித்தனர்.

ஆனால் தடுப்புச்சுவர் கட்டுவதன் நோக்கம், விவரத்தை எடுத்து கூறி பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றது. 

மேலும் செய்திகள்