மணல் கடத்தல்: 4 மாட்டுவண்டிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக கூறி 4 மாட்டுவண்டிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-08-03 22:22 GMT
நெல்லிக்குப்பம், 



கடலூர் அருகே திருவந்திபுரம் ஓட்டேரி கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து தினமும் இரவு 50-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக கடலூர் தாலுகா அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடந்த மாதத்தில் வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு, ஓட்டேரியில் இருந்து கெடிலம் ஆற்றுக்கு செல்லும் பாதையில், மாட்டுவண்டிகள் சென்று வராத வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. மேலும் தொடர்ந்து யாரேனும் இந்த பகுதியில் இருந்து மணல் கடத்தினால் உடனடியாக வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்களிடம் அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் வருவாய்த்துறையினரால் பாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடிவிட்டு சிலர் மாட்டுவண்டிகளுடன் கெடிலம் ஆற்றுக்கு சென்றனர். அங்கு அவர்கள் மணலை அள்ளி மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த ஓட்டேரி கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து, 4 மாட்டுவண்டிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி மற்றும் கிராம உதவியாளர் குப்புசாமி ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது வருவாய்த்துறையினருக்கும், மாட்டுவண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள், எங்கள் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தக்கூடாது என்று கூறினர். அதற்கு போலீசார் மணல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் 4 மாட்டுவண்டிகளையும் விடுவித்தனர். மணல் கடத்த பயன்படுத்தியதாக 4 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்