ஜெகதேவி பாலமுருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஜெகதேவி பாலமுருகன் கோவிலில் நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2018-08-05 22:30 GMT
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஜெகதேவி கிராமத்தில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை யாகசலை பூஜை, நவகிரக ஹோமம், முருகனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும், ஆராதனைகளும் நடந்தது. அதைத் தொடர்ந்து இடும்பன் பூஜை நடந்தது.

பின்னர் பக்தர்கள் புஷ்பகாவடி, மயில் காவடியுடன் வேல் போட்டுக்கொண்டும், முதுகில் அலகு குத்திக்கொண்டும் வந்தனர். அத்துடன் கல் உரல், இரும்பு சங்கிலி, டிராக்டர் உள்ளிட்டவைகளை முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர். இதில் பக்தர் ஒருவர் 300 அடி நீளமுள்ள அலகினையும், உடல் முழுவதும் எலுமிச்சம்பழம் குத்திக்கொண்டும் வந்தார். மேலும் ஒரு பக்தர் காரையும், மற்றொருவர் சடல் தேரினையும் இழுத்து வந்தனர்.

அதன்பின் பழனி ஆண்டவர் சித்திரத்தேரில் அமர சாமி பவனி வந்தது. அதைத் தொடர்ந்து பக்தர் ஒருவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பரண் மீது படுத்துக்கொள்ள, அவரது மார்பு மீது குந்தானி வைத்து, 5 கிலோ மஞ்சளை போட்டு உலக்கையால் 2 பேர் இடித்தனர். அவ்வாறு இடிக்கப்பட்ட மஞ்சளை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் சில பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி சாமிக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டினார்கள்.

அத்துடன் குழந்தை வரம் வேண்டி, குழந்தை பிறந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அந்தரத்தில் தொங்கியபடி வந்தவர்களிடம் கொடுக்க, அவர்கள் குழந்தைகளை தூக்கி சென்று, சாமியின் காலடியில் வைத்து ஆசி பெற்று மீண்டும் பெற்றோர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை காண கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஜெகதேவி பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்