வடவாற்றில் அடித்துச்செல்லப்பட்ட ஓய்வுபெற்ற தீயணைப்பு அதிகாரி பிணமாக மீட்பு

காட்டுமன்னார்கோவில் அருகே வடவாற்றில் அடித்துச்செல்லப்பட்ட ஓய்வுபெற்ற தீயணைப்பு அதிகாரி பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2018-08-05 22:00 GMT
காட்டுமன்னார்கோவில், 



காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தொரப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் (வயது 75). ஓய்வுபெற்ற தீயணைப்பு நிலைய அதிகாரி யான இவர், நெய்வேலியில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தனது பேரன் கிருஷ்ணாவுடன்(15) வடவாற்றில் குளிக்க சென்றார். அங்கு கிருஷ்ணா குளித்துவிட்டு வடவாற்றின் கரையோரத்தில் நின்றான்.

ராதாகிருஷ்ணன் வடவாற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்தால் ராதாகிருஷ்ணன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணா, தாத்தாவை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினான்.

உடனே அந்த பகுதியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள், ராதாகிருஷ்ணனை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்ல. இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வடவாற்றில் இறங்கி ராதாகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி இரவு வரை நீடித்தது. இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேற்று காலை 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வடவாற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் பாதையில் உருத்திரசோலை மதகு அருகில் உள்ள முட்புதரில் ராதாகிருஷ்ணனின் உடல் சிக்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை, பிணமாக மீட்டனர். இதனை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்