பல்லாவரத்தில் துணிகரம் கோவில் திருவிழா கூட்டத்தில் 2 பெண்களிடம் 27 சவரன் நகை திருட்டு

பல்லாவரத்தில் கோவில் திருவிழா கூட்டத்தில் 2 பெண்களிடம் 27 சவரன் நகைகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-08-05 21:45 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி கிருத்திகை விழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் கோவிலில் சாமி கும்பிட வந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலை பயன்படுத்தி பம்மல் எல்.ஐ.சி. காலனி, 5–வது குறுக்குதெருவை சேர்ந்த பரமேஸ்வரி (வயது 43) என்பவரின் 21 சவரன் தாலி செயினையும், பம்மல் என்.எஸ்.கே. தெருவை சேர்ந்த சீனிதங்கம் (53) என்பவரிடம் 6 சவரன் செயினையும் மர்மகும்பல் பறித்துச்சென்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து பல்லாவரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

ஜமீன் பல்லாவரம், சாலமன் தெருவை சேர்ந்தவர் மாயவன் (34). இவர் கடந்த 3–ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான அரியலூருக்கு சென்றார். நேற்று திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2½ சவரன் நகை திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

இதேபோல் ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 20 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டனர். இந்த திருட்டுகள் குறித்தும் பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்