தாம்பரம் பகுதியில் ஆய்வு மழை தொடங்குவதற்கு முன்பு கால்வாய்களை தூர்வார கலெக்டர் உத்தரவு

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார். அப்போது, மழை தொடங்குவதற்கு முன்பு அனைத்து மழைநீர் கால்வாய்களையும் தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2018-08-05 23:00 GMT

தாம்பரம்,

பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு மழை காலத்திலும் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக மழை வெள்ளம் கடந்த காலங்களில் பாதித்த பகுதிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன்படி, தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அடையாறு ஆறு, பாப்பன் கால்வாய், பாரதிநகர், கண்ணன் அவென்யூ, சி.டி.ஓ. காலனி, பீர்க்கன்காரணை ஏரி, வாணியங்குளம், பெருங்களத்தூர் பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் நேரில் சென்று வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.

தாம்பரம் முடிச்சூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்தி மழை தொடங்குவதற்கு முன்பு செய்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.

இதேபோல மழை வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் தாம்பரம் நகராட்சி, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பேரூராட்சிகள் மழை நீர் கால்வாய்களை முழுமையாக மழை தொடங்குவதற்கு முன்பு தூர்வாரி மழை நீர் தடையில்லாமல் கால்வாய்களில் செல்லும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது செங்கல்பட்டு மண்டல செயற்பொறியாளர் முருகேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சாந்தகுமார், தாம்பரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் மனோகரன், பொதுப்பணிதுறை உதவி பொறியாளர் குஜ்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

மேலும் செய்திகள்