கோவில் திருவிழாவில் தகராறு: சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது

கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-05 22:15 GMT
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள அய்யம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் ஆடிதிருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி கோவில் அருகே ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனால் அங்கு ஜெகதாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலர் மது அருந்தி விட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி முன்பு நின்று தகராறு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர் களுக்கும், சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசனை சிலர் தாக்கி விட்டு, போலீஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து ஜெகதாப்பட்டினம் போலீசார் அய்யம்பட்டினம் பகுதியை சேர்ந்த முத்து (வயது 35), ரமேஷ் (23), துரை (22), பழனி (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த 4 பேர் மீதும் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 4 வாலிபர்களையும் அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்