மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க நவம்பருக்குள் அனைத்து சட்டப்பூர்வ பணிகளும் நிறைவு பெறும்

கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-05 23:30 GMT
மும்பை,

கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று வானொலியில் பேசியதாவது:-

மராத்தா சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் கொண்டு வரலாம். ஆனால் அது கோர்ட்டில் நிற்காது. இது மக்களை ஏமாற்றும் வேலையாக அமைந்து விடும். எனவே இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பூர்வ பணிகளை செய்து வருகிறோம். இந்த பணி நவம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும்.

மேலும் இடஒதுக்கீடு பிரச்சினையில் மராட்டிய மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது அறிக்கையை எப்போது தாக்கல் செய்யும் என்பதை நாளை (செவ்வாய்க்கிழமை) ஐகோர்ட்டில் தெரிவிக்க உள்ளது. அறிக்கையை விரைவாக தாக்கல் செய்யும்படி ஆணையத்தை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடன் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளோம். அப்போது மராத்தா இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்படும். அல்லது தீர்மானம் நிறைவேற்றப்படும். இது தான் இடஒதுக்கீடு பிரச்சினைக்கு நிலையான தீர்வாக இருக்கும்.

எனவே மராத்தா சமுதாய மக்கள் வன்முறை போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும், யாரும் தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

மராத்தா இடஒதுக்கீடு வழங்கும்போது அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்