முக்கொம்பு, கல்லணை சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை அமைச்சர் தகவல்

முக்கொம்பு, கல்லணை சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

Update: 2018-08-05 23:00 GMT
திருச்சி,

திருச்சி கண்டோன்மெண்ட்டில் இயங்கி வரும் காவல் கட்டுப்பாட்டு அறையில் குமார் எம்.பி.யின் தொகுதி நிதி ரூ.80 லட்சத்தில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

திருச்சி மாநகரில் மெயின்கார்டுகேட், கோட்டை, ஸ்ரீரங்கம் உள்பட அனைத்து முக்கிய பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 300 கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு அவை 40 எல்.இ.டி. டி.வி. மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறு, சிறு அசம்பாவித சம்பவங்களையும் பார்க்க முடியும். கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட ஒரு பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாநகரில் தனியார் வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், ஓட்டல்கள் உள்பட அனைத்து இடங்களிலும் கேமராக்களை பொருத்தும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 3 ஆயிரம் கேமராக்களை ஒருங்கிணைக்க முடியும். அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும்.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் 5 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக அறிவிக்கப்படவுள்ள பிரசாத் திட்ட நிதி 2 மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதில் ஒன்றாக திருச்சி மாவட்டத்துக்கு வழங்கும்படி வலியுறுத்தி அந்த நிதியை கேட்டு பெற்று முக்கொம்பு, கல்லணை சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் நிதியை அனைத்துத்துறைகளின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வண்ணத்துப்பூச்சி பூங்காவை சுற்றியுள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன், உதவி கமிஷனர்கள் சிகாமணி, விக்னேஷ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்