சாலையோரத்தில் லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் திடீர் போராட்டம்

திண்டுக்கல் அருகே லாரிகளை சாலையோரத்தில் நிறுத்தி டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-05 23:29 GMT
திண்டுக்கல், 


தமிழகம் முழுவதும் கடுமையான மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆற்று மணலுக்கு மாற்றாக கருங்கல்லில் தயாராகும் மணலை (எம்சாண்ட்) பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது. ஆனால், சிலர் ஆற்று மணலுக்கு மாற்றாக விவசாய நிலங்களில் கிடைக்கும் மணலை சலித்து கட்டுமானத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

இதையொட்டி, சில முக்கிய பிரமுகர்கள் விவசாயிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அவர்களின் நிலங்களில் இருந்து மணலை அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று காலை திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் திருச்சி பைபாஸ் சாலையோரத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டன. பின்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் திடீரென லாரி முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட கிராவல் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

லாரியில் மணலை கொண்டு செல்ல ஒரு நடைக்கு ரூ.200 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், திண்டுக்கல்லை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கல்குவாரிகளில் வழங்கப்படும் நடைச்சீட்டுகளை அதிகாரிகளின் உதவியோடு வாங்கிக்கொண்டு ஒரு நடைக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கிறார்.

இதன்காரணமாக மணலின் விலை தாறுமாறாக உயர்வதால் வீடு கட்டும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர் நிர்ணயித்த கட்டணத்தை கொடுக்கவில்லை என்றால் மணலை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு மிரட்டப்படுகிறோம். இதுகுறித்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் ஆகியோரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார். இதைத்தொடர்ந்து, 2 மணி நேரம் கழித்து லாரிகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். 

மேலும் செய்திகள்