மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 1,190 லிட்டர் சாராயம் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 1,190 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-06 21:30 GMT

உளுந்தூர்பேட்டை,


எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புள்ளூர் குறுக்கு சாலை வழியாக வந்த மினிலாரியை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்தனர். போலீசாரை பார்த்ததும், மினிலாரியை ஓட்டி வந்தவரும், அவருடன் வந்தவரும், மினிலாரியை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு, அதில் இருந்து இறங்கிஅருகில் உள்ள காப்புக்காட்டுக்குள் புகுந்து ஓடினர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த மினிலாரியை சோதனை செய்தனர். அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 34 கேன்களில் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காப்புக்காட்டுக்குள் தப்பி ஓடியவர்களை போலீசார் துரத்திச்சென்றனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பின்னர், காப்புக்காட்டில் ஒரு குகையில் மறைந்து இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் மினிலாரியை ஓட்டி வந்தவர் புதுச்சேரி மாநிலம் மடுகரை பகுதியை சேர்ந்த ரவி மகன் விவேக்(வயது 24), அவருடன் வந்தவர் நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்த மனோகர் மகன் சங்கர்(24) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கள்ளக் குறிச்சி பகுதியில் விற்பனை செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து சாராயத்தை மினிலாரியில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சங்கர், விவேக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியும், அதில் இருந்த 1,190 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்