சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது

Update: 2018-08-06 22:00 GMT
கடலூர், 



குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சின்னதானங்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்த தணிகாசலம் மகன் செந்தில்குமார்(வயது 39). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் செந்தில் குமார் வீட்டின் வழியாக, 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி டியூசனுக்கு சென்று வந்தாள். அப்போது செந்தில்குமாருக்கு அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று டியூசனுக்கு சென்ற அந்த சிறுமியை அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு செந்தில்குமார் அழைத்துச்சென்றார். அங்கு சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

கைது

கடந்த 19.9.2016 அன்றும் டியூசனுக்கு சென்ற சிறுமியை செந்தில்குமார் வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய அழைத்தார். இதனால் பயந்து போன அவள் உடனே அங்கிருந்து ஓடி வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து டியூசனுக்கும் செல்லாமல் பயத்துடன் காணப்பட்டார்.

சிறுமியிடம் திடீர் மாற்றத்தை கண்ட அவளது பெற்றோர் விசாரித்தனர். அப்போது செந்தில்குமார், ஏற்கனவே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மீண்டும் தன்னை அழைத்ததாகவும் கூறி அழுதாள்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து செந்தில்குமார், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜர் ஆனார். 

மேலும் செய்திகள்