கோவை சிறையில் இருந்து ராக்கெட் ராஜா ஜாமீனில் விடுதலை

கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராக்கெட் ராஜா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டார். சிறை வாசலில் அவருடைய ஆதரவாளர்கள் கோ‌ஷமிட்டும், மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர்.

Update: 2018-08-07 00:00 GMT

கோவை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர், நாடார் மக்கள் சக்தி அமைப்பின் நிறுவன தலைவராக உள்ளார். பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இவரை கடந்த மே மாதம் 6–ந்தேதி சென்னை தேனாம்பேட்டை யில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி ராக்கெட் ராஜா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ராக்கெட் ராஜாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மதுரை ஐகோர்ட்டு கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதன்படி அவர் தினசரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மும்பையில் தங்கி இருந்து அங்குள்ள கமி‌ஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என அவரது வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஐகோர்ட்டு ஏற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் கோவை மத்திய சிறையில் இருந்து ராக்கெட் ராஜா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை அழைத்து செல்வதற்காக அவரது ஆதரவாளர்கள் 300–க்கும் மேற்பட்டோர் 50 கார்களில் கோவை மத்திய சிறை முன் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சிறை வாசலில் ராக்கெட் ராஜாவுக்கு பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

அப்போது ராக்கெட் ராஜா கூறும்போது, ‘தீமைகள் ஒழிந்து நல்லதே நடக்கும். அநியாயம் தட்டிகேட்கப்படும்’ என்றார். சிறை முன்பு அதிக அளவில் கூட்டம் சேர்ந்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு இருந்தது. இதையடுத்து ராக்கெட் ராஜா கோவையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றார்.

மேலும் செய்திகள்