திருகளப்பூர் கிராம மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் அதிகாரியிடம் மனு அளித்தனர்

திருகளப்பூர் கிராம மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-08-06 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட சமூக நல பாதுகாப்பு நல அதிகாரி பூங்கோதை தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 339 மனுக்களை மாவட்ட சமூக நல பாதுகாப்பு நல அதிகாரியிடம் வழங்கினர்.

பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

திருகளப்பூர் கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் திருகளப்பூர் கிராமத்தில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு தமிழக அரசு கடந்த 2001-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியது. ஆனால் இது நாள் வரை மேற்கண்ட பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகள் செய்து தரப்பட வில்லை. எனவே பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் தங்களது குடும்பங்களுக்கு மானியத்தில் வீடுகள் கட்டி தரவும், திருகளப்பூர் கிராமமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆண்டிமடம் தாலுகா பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், அரசு தங்களுக்கு வழங்கிய இலவச பட்டாக்களில் சொந்தமாக வீடுகள் கட்டி கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் கடன் வழங்க ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதே போல் ஆண்டிமடம் தாலுகா வெளிச்சங்குடி கிராமத்தில் வசிக்கும் ஒரு தரப்பினை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், அரசின் நலத்திட்டங்களை பெற்று கொள்வதற்கும் எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில், காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அதிகாரிக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்