புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை பணிகள் கணக்கெடுப்பு 3 நாட்கள் நடக்கிறது கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த தூய்மை பணிகளின் கணக் கெடுப்பு 3 நாட்கள் நடக்கிறது என கலெக்டர் கணேஷ் கூறினார்.

Update: 2018-08-06 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் சார்பில் 2018-ம் ஆண்டிற்கான தூய்மை பணிகள் கணக்கெடுப்பு குறித்த ஊரக சின்னத்தின் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, தூய்மை பணிகள் கணக்கெடுப்பு குறித்த ஊரக சின்னத்தை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

மத்திய, மாநில அரசுகளால் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டு தூய்மை பணிகள் கணக்கெடுப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும், 497 ஊராட்சிகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த தூய்மை பணிகள் கணக்கெடுப்பின் போது தூய்மை பாரத இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம் முன்பு இருந்த நிலையிலிருந்து தூய்மையை கடைபிடிப்பதில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், தூய்மை குறித்து போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சந்தை பகுதிகள், பஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணிகள் குறித்த கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து “முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்” என்ற கருத்தினை உள்ளடக்கிய சுகாதார உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், புதுக்கோட்டை கோட்டாட்சியர் டெய்சிகுமார், ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் முருகண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்